Monday, March 15, 2010

சம்மதம்.....



அந்திவானம் நீலநிறம்

அதிகாலை சிவப்பு நிறம்

மத்தியிலே வெள்ளை நிறம்

மலைமுகிலோ கருப்பு நிறம்

ஆனாலும் வானம் ஒன்று!!



இந்தியனில் கருப்பனுண்டு

இளஞ்சிவப்பு வெள்ளையுண்டு

இனிமையுடன் பழகுவதில்

இருப்பதள்ளி கொடுப்பதிலும்

எவனுண்டு வையந்தன்னில்

இந்தியனுக் கீடுசொல்ல!!



பாடும்மொழி வேறுபடும்

பாட்டின் இசை ஒன்றேதான்

மொழி நிறத்தால் மாறிடினும்

மாறா ஒற்றுமை யுடையவனே

இமயம் குமரி இடைப்பட்ட

இடந்தனில் வாழ்ந்திடும் இந்தியனே!!



தனித்தனி ஓடும் நூலிழைகள்

தன்மானம் காக்கும் ஆடையாம்போல்

பனித்துளியாய் பலசாதி மக்கள்

உயர்த்துவர் தேசத்தை கூட்டுறவால்.


புத்தன் ஏசு நபியன்னல்

ஆழ்வார் சைவ நாயன்மாரென

நித்தம் இறைவனை கரம்கூப்பி

தொழுதிடும் மதங்கள் பலவுண்டு

நல்மார்க்கம் கூறும் எம்மதமும்

சம்மதம் என்பவன் இந்தியனே!!




2 comments:

  1. இந்தியனென்று சொல்லும்போதே இந்திரியங்களைந்தும் சிலிர்ப்பது காணீர்..
    வந்திங்கு வாழ்ந்து வளமுடைத்தோரும்
    முந்திப்பிறந்தே முடிந்துவிட்டோரும்
    சிந்திக்கும் சன்மார்க்க வழிகண்டோரும்
    சிந்திங்கு பாடியே பண்ணிசைப்பாரே...

    ஆதிரா... உனது கவிதை தந்த ஊற்று என்னிலும் பாய்ந்து உன் பெருமழைக்குமுன்னே என் சிறுதூறலாய்...

    கலை

    ReplyDelete
  2. வாழ்த்தோடு சேர்ந்துவரும் உன் அன்பின் தூறலில் என் அடி மனமும் குளிர்ந்தது தோழா. என்றென்றும் குளிர் நிலவாய் என் நன்றி வட்டமிடும் உன்னிதய வானமதில்.

    ReplyDelete