Sunday, March 14, 2010

வள்ளுவ வாழ்த்து....


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


வள்ளுவ வாழ்த்து.... Thiruvalluvane.jpg


வாமன அவதாரக் கண்ணனோ வானுயர

வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!


காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!


முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!


குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக
நிற்கும் இறையே!!!!

2 comments:

  1. இரண்டே முக்காலடியில் மனிதஉலகை அளந்த
    வாமனன் வள்ளுவன்...

    இருபது அடிகளில் அவனை அளந்த பாவினள்
    ஆதிரை...!

    எந்த சொற்களில் பாராட்டுவேன் என அறியாத
    பாமரன் கலை...

    பாராட்டுக்கள் ஆதிரா...!

    ReplyDelete
  2. செல்லும் வழி தோறும் தொடரும் வாழ்த்துக்கு, இனிமை இதயத்துக்கு என் நெஞ்சத்து உள்ளிருந்து கிளம்பும் நன்றி கண்வழியும் உப்பு அலைகளாகி என்றென்றும் உன் பதமலரைக் கழுவும்.

    ReplyDelete