Sunday, March 14, 2010

என் தலையணையில்....


ன் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்
பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....


யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.


பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...


அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...


இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?


இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


9 comments:

  1. புதுகவிதைச் சுரையிலிருந்து
    புத்தம்புது தமிழ்மதுவை
    சொல்லழகுக்கிண்ணம் நிறைத்து
    சுவையாக வழங்கி விட்டாய்...
    இலக்கியப் போதையில்
    தள்ளாடுகிறேன் தாங்கிவிடு....


    குடகுமலை அருவிப்பக்கம்
    தேன்சாரல் தென்றலுக்கு
    பாங்காக குழல்கோதி
    மலைத்தேனை மையாக்கி
    சங்கப்புலவரிடம் இரவலாக
    தங்க எழுதுகோல் சற்றே வாங்கி
    பொன்னேட்டு இலைமீதில்
    பொறுமையாக எழுதினாயா...?


    ஆபாசமாகவும் ஆயாசமாகவும்
    கிறுக்கல்கள் வரும்போழ்தில்
    பாயாசமாக இனிக்கும்
    பரவசமான உன்கவிதை
    தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
    கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
    அன்னோர் பெருமை கொண்ட
    ஆதிரையே நீ வாழி....


    உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
    என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?

    ReplyDelete
  2. கவிதைக்குக் கவிதைப் பரிசை அள்ளித்தரும் என் மனதைக் கொள்ளைக் கொண்ட கலை அவர்களே.. உங்கள் கவிதைக்கு என் பரிசு என் நெஞ்சத்தில் இருந்து பாய்ந்து வரும் நன்றி எனும் உயிர்க்குருதி... வார்த்தைகளின்று...

    ReplyDelete
  3. //இந்த உலகுக்கும் எனக்குமான
    தொடர்பு துண்டிக்கப்படும்
    மயான நெருப்பிலும்
    வேகின்ற நெஞ்சுக்குள்
    வேகாமல் நிலைக்கும்
    அவன் நினைவு முகம்
    பசுமையாக....//

    இதுபோன்ற உறவு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் சகோதரி. அருமையான கவிதை, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கவிதையும்
    கவிதைக்குக் கவிதையும் அருமை!

    ReplyDelete
  5. "நேற்றுகளில் மட்டுமே இருந்த
    உண்ணத நேரத்தை
    யுகங்கள் தோறும்
    நகர்த்திச் செல்ல
    கரம் கொடுப்பானா?"

    யார் அந்த கொடுத்து வைத்த நபர் தோழி?....

    அப்புறம் பின்னூட்டம் இடுகையில் Word verification வருகிறது அதனை எடுத்துவிடுங்கள்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //இதுபோன்ற உறவு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் சகோதரி. அருமையான கவிதை,//

    உற்வுகள் என்றும் நம் உணர்வுகளில்.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அபராஜிதன்..

    ReplyDelete
  8. முதன் முதலாக என் குடிலுக்கு வருகை புரிந்துள்ளீர்கள் திரு கே. ஆர். பீ.. செந்தில் அவர்களே.. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...
    Word verification நீக்கி விட்டேன். நன்றி கருத்து பகர்ந்தமைக்கு..

    ReplyDelete
  9. தங்கள் தொடர் வருகைகும் மனமார்ந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி குணா..

    ReplyDelete